ஆட்டம் ஆரம்பம்

 வெளி தோற்றத்திற்கு ஓர் அழகான குட்டை போல் இருந்தாலும் உள்ளே பல அழுக்குகளும் பாசிகளும் படிந்தே இருந்தன. அந்த குட்டை வேறு ஒன்றும் இல்லை என் ஆழ்மனம் தான்.


உள்ளே பல குமுறல்களும், கோபங்களும், கனவுகளும், கடந்த கால நினைவுகளும் இருந்தாலும், வெளியே ஏனோ ஓர் வெளுப்புச் சாயம் பூசிக்கொண்டது போல் இருந்தது. அந்தக் குட்டை தன் நிலை அறிய அடிக்கடி கல் வீசிக் கொண்டு தான் இருக்க வேண்டும். அப்படி என் நிலை அறிய எனக்கொரு வாய்ப்பாக அமைந்தது "வேட்கையோடு விளையாடு" எனும் புத்தகத்தில் உள்ள ஓர் கட்டுரை வாசிப்பும், அந்தப் புத்தகத்தின் எழுத்தாளரான ஈரோடு கதிர் அவர்களுடனான உரையாடலும்.  


அதில் அவர் குறிப்பிட்டுள்ள லட்சியம், கனவு, ஆசை, நோக்கம், விருப்பம் பற்றிய புரிதல் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. பல கனவுகள் இருப்பினும், அதற்கான தேடலோ மெனக்கெடலோ, ஏன் ஓர் முதல் அடியே இன்னும் நாம் எடுத்து வைக்கவில்லை என்று தோன்றிய தருணம் ஓர் சவுக்கடி போல் இருந்தது.


பொதுவாகவே நான் ஓர் குற்றச்சாட்டு வைப்பதுண்டு .  எனக்கு இந்த இருபத்து நான்கு மணி நேரம் போதவே இல்லையே. கூடுதல் நேரம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.  ஆனால், அப்படி என்ன ஒவ்வொரு நாளும் சாதனை செய்கிறேன் என்று பார்த்தால் - ஒன்றுமில்லை, தன்னிலை மறந்து அளவுக்கு மிகவும் அப்பாற்பட்டு அலுவலகப் பணியில் மூழ்கி இருந்தேன். எந்த அளவுக்கு என்றால் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் அலைபேசி அழைப்புகளையும் செய்திகளையும் கூட இரண்டு நாட்களுக்கும் மேலாகப் பார்க்க மறந்து இருந்திருக்கிறேன்.


சரி, இத்தகு மோசமான நேர மேலாண்மையை மாற்றத் தான் முடியாதா என்ற கேள்வி எழுந்தது. நம் ஆசைகளுக்கும் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் நாள் வந்து விடாதா என்ற ஏக்கம் பல நாட்களாக இருந்தது. நிறைவாக, இன்று ஓர் முதலடியை எடுத்து வைக்கிறேன் இந்த முதல் கட்டுரை வாயிலாக என்னுடைய எழுதும் வேட்கைக்கு.  


சிறு சிறு வரிகள், கவிதைகள், சொல்லாடல்கள் இதுவரை எழுதி வந்தாலும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் காரணத்தாலும், என் மனத் தேக்கத்தில் கனத்துக் கொண்டிருக்கும் சில எண்ணங்களைப் பகிர்வதற்கும் இந்த கட்டுரை வடிவம் எனக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.


இனி காரணம் சொல்லி தள்ளிப்போட எனக்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு எப்படி? துவங்குங்கள் உங்கள் கனவுகளை நோக்கி ... செயல் வடிவம் கொடுங்கள், கண்டிப்பாக காலம் அதைப் பொன்னாக்கும்.

Comments

  1. நல்ல தொடக்கம்😊

    ReplyDelete
  2. ஆட்டம் பெரும் கொண்டாட்டமாக மாறட்டும். பாராட்டுக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒரு நிகழ்வு பல கேள்விகள்

A Double Dhamakka