ஒரு நிகழ்வு பல கேள்விகள்

அனைவருக்கும் வணக்கம்!!

சமீபத்தில் நான் மேற்கொண்ட  பயணத்தின் போது ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்குப் பின் பல்வேறு கேள்விகள் எனக்கு எழுந்தன. அதை அசைபோடுவது மட்டுமின்றி இங்கே பதிவிட்டால் இன்னும் பல விடயங்கள் புலப்படும் என்று நம்புகிறேன்.

சென்ற வாரம் நான் நண்பர்களுடன் உத்தர்காண்ட் மாநிலத்திற்குச் சுற்றுலா சென்று வந்தேன். அதில் குறிப்பாக ஒரு நாள் முழுவதும் ஹரித்வாரைச் சுற்றிப் பார்த்தோம்.  அன்றைய நாள் முழுக்கக் கோவில் மயமாகவே இருந்தது. இளைஞர்கள் சேர்ந்து செல்லும் சுற்றுலாவில் கோவில் கோவிலாகச் சுற்றுவீர்களா எனச் சிலர் நகைத்ததும் உண்டு. நாங்கள் என்ன மஞ்ஞுமல் பாய்ஸா?  நாங்கள் மலைக்கோயில் பாய்ஸ்.. அன்றொரு நாள் முழுவதும் சில மலைகள் ஏறி இறங்கி இறைவனை வழிபட்ட வண்ணம் இருந்தோம் .

சரி இந்த நிகழ்வில் என்ன கேள்விகள் என்றா கேட்கிறீர்கள். ஒன்றல்ல; பல. 

நாங்கள் காலை முழுவதும் மூன்று கோவில்களுக்குச் சென்றோம்; மானசா தேவி, மாயா தேவி, சண்டி தேவி, அஞ்சனி தேவி ஆகியோரை வழிபட. இவை அங்கு மிகவும் பிரசித்திபெற்ற கோயில்கள். மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மலை ஏறி இறங்க சில கோயில்களில் படிக்கட்டுகள் இருந்தன; சிமெண்ட் சாலை இருந்தது; ரோப் கார் வசதியும் இருந்தது. ஆனால் பெரும்பாலானோர் ரோப் கார் வசதியைப் பயன்படுத்தாமல், மலை ஏறி இறைவனைத் தரிசிக்க வந்தது வியப்பாக இருந்தது. குறிப்பாக அந்த சிமெண்ட் சாலை கூட நடைபயணத்திற்காக மட்டுமே. வண்டி வாகனங்கள் அனுமதி இல்லை. ஏனெனில் அது அப்படி விரிவான வழியும் இல்லை; அது மட்டுமில்லாமல  நல்ல செங்குத்தாக இருந்தது. ஒரு வண்டி ஏற, மற்றொன்று இறங்க, மக்கள் நடக்க என மிக சிரமமாக இருந்திருக்கும். அதனால் தான் வண்டிகள் அனுமதி இல்லை போலும். எனக்கு இப்படி மலையேற்றங்கள் மேற்கொண்டால் மூச்சிறைச்சல் அதிகம் ஏற்படும். அதையும் மீறி ஒரு உத்வேகத்துடன், இறைவனை நினைத்தவாறும்,   நண்பர்களின் உந்துதலாலும், உடன் நடக்கும் சிறு பிள்ளைகள், வயதானோரின் ஆன்மீக ஆர்வத்தாலும் ஒரு வழியாக மலை ஏறிவிட்டேன். தூரத்தில் இருந்து பார்க்கும் போது எட்டா கனி போல் இருந்தது; ஒரு வழியாக வந்தடைந்து விட்டோமே  என்ற மகிழ்ச்சி நிறைவாக. அப்பொழுது தான் எனக்கு முதல் கேள்வி எழுந்தது.

என்ன தான் அங்கு கோவில்கள் நகரத்துக்கு மிக அருகேவோ நகரத்துக்கு மத்தியிலோ அமைந்திருந்தாலும், அதன் அமைப்பையோ அங்கு சென்று வருவதையோ பெரிதும் எளிதாக்கிக்  கொள்ளவில்லை. அங்கே இப்படி ஒரு சில மணி நேரம் மலை ஏறி இறங்குவதும் அந்த மக்களுக்கு வழக்கமாகி இருக்கலாம். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கலாம். ஆனால், நம்மூர்களில் இருக்கும் கோவில்களை எண்ணிப்பார்த்தால் அதுவும் பிரபலமான கோவில்களை நினைத்தால் கூட அங்கு செல்லும் வழி முற்காலத்தில் எப்படி இருந்ததோ அப்படி இல்லை தற்போது. நம் வசதிக்கேற்ப அந்த இடங்களைச் சுற்றிக் குடியேறி தேவையான வசதிகளைச் செய்து மகிழுந்தில் சென்று வரும் அளவிற்கு இருக்கிறது. ஒரு வேளை அன்றாட வாழ்க்கை முறையில் இத்தகு உடல் உழைப்புகள் இருக்கும் படி தான் அவை அமைந்திருந்தன; நாம் அதை மாற்றிவிட்டோமோ?  என்னதான் சொந்த ஊருக்கும் கிராமப்புறங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் நான் சென்றிருந்தாலும் அதிக நாட்கள் ஊரகப் பகுதிகளிலே இருந்ததாலோ என்னவோ இத்தகு கேள்விகள் எனக்கு எழுந்தன.

சரி; மலை ஏறிவிட்டோம், அடுத்து இறைவனின் தரிசனம் தான் என்று நினைத்திருந்தால், அதற்கு ஒரு நீண்ட நெடிய வரிசை. அப்பொழுதும் நம்மூர் நினைவுகள் வந்தன. இப்படிக் கூட்டங்களில் முந்தி அடித்துச் செல்வதும், சீக்கரம் இறைவனைக் காண வேண்டும் என்று பணம் கொடுத்து, பணத்திற்கு ஏற்றாற்போல் பல வரிசைகளையும் வைத்து, இத்தனையும் மீறி அந்த நெரிசலில் மூச்சு முட்டாமல் சுவாமி தரிசனம் செய்து வெளியே வருவதே பெரும் பாடு. ஆனால், அங்கோ அனைவரும் மிக அழகாக வரிசையை மதித்து நின்று, அப்பொழுதும் இறைவனின் பெயரை உச்சரித்து, கோஷங்கள் எழுப்பிப், பாடல்கள் பாடி தெய்வச் சிந்தனையால் ஒன்றிணைந்து இருந்தனர். இதுமட்டுமில்லாமல் , மாலையில் கங்கா ஆரத்தி நடைபெற்றது. ஆறு மணி ஆரத்திக்கு, ஐந்து நாற்பத்தைந்து மணிக்கு வந்து இடத்திற்கு அடித்துக் கொள்ளாமல், நான்கு, நான்கரை மணிக்கே வந்து அழகாக வரிசையில் அமர்ந்து காத்திருந்தனர். ஆரத்தி முடிந்த பிறகும், அதைத் தொட்டு வணங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த போதும், அனைவரும் ஒரே நேரத்தில் ஆரத்தியை நோக்கிக் குழுமி இருக்காமல், முதல் இரு வரிசையினர்  முதலில் வந்தனர்; அவர்கள் முடித்ததும் அதற்குப் பின் வரிசையில் உள்ளவர்கள் வந்தனர். இத்தகு காட்சி எனக்கு மிக அழகாக இருந்தது; மெய் சிலிர்க்க வைத்தது. அங்கு நடப்பதற்கும் இங்கு நடப்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றிய சிந்தனைகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், சரியான கேள்விகளோ பதில்களோ கிடைக்கப் பெறவில்லை.

மொத்தத்தில்,  நிறைவாக இருந்தது அந்தப் பயணம். இந்த சிந்தனைகளோடும் கருத்துகளோடும் இப்பொழுது விடைபெறுகிறேன். 
நன்றி!

Comments

Popular posts from this blog

ஆட்டம் ஆரம்பம்

A Double Dhamakka