திரைப்பாடங்கள்


சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிப்புப் பற்றி பலரும் நெகிழ்ச்சியோடு பேசுவதைப் பிரமிப்புடன் கேட்டிருக்கிறேன். ஆனால், எனக்கோ திரைப்படங்கள் மீது தான் ஆர்வம் அதிகம். சமீபத்தில் புத்தக வாசிப்பிலும் மூழ்க ஆரம்பித்துள்ளேன். ஏனோ, திரைப்படங்கள் வெறும் கேளிக்கையாக மட்டுமே பெரிதும் நம்ப வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திரைப்படங்கள் அதற்கானது மட்டும் இல்லை; அது பார்ப்பவரின் எண்ணத்தைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டு அப்படியே கடந்து செல்ல முடியவில்லை. அவை, எனக்கு ஏதோ ஒன்றை உணர்த்துகின்றன; ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகின்றன; இப்படி சிலாகித்துப் பேசிக் கொண்டே போகலாம். குறிப்பாக, திரைப்பாடல்கள் கூறும் தத்துவங்களும், கற்றுத்தரும் பாடங்களும் தனிச்சிறப்பு. அப்படி திரைப்பாடல்களில் இருந்து கற்கும் பாடங்களைப் பற்றிய இத்தொகுப்பே - "திரைப்பாடங்கள்"



திரைப்பாடல்களைப் பற்றிப் பேசும் பொழுது சமீப காலமாக பாடல்களில் இசை பெரிதா? வரிகள் பெரிதா? என்னும் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. ஒன்றைத் தாழ்த்தி மற்றொன்றை உயர்த்தி மாரு தட்டிக் கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை. சரி, நமக்கு ஏன் இந்த வீண் அரசியல்.

இந்தக் கட்டுரையில் குறிப்பாக நான் பார்த்து, கேட்டு, ரசித்த தமிழ்ப் பாடல் வரிகளையும்/ இசையையும் அதில் இருந்து எளிதில் கற்கக் கூடிய பெரும் பாடங்களையும் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

எங்கே தொடங்கலாம்? தமிழின் அடிப்படையான உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகளில் இருந்தே ஆரம்பிக்கலாமே. சென்ற வருடம், ஒரு பள்ளி ஆசிரியை அவர் மாணாக்கர்களுக்கு உயிர்மெய் எழுத்துகளை ராகத்தோடு ஆடிப் பாடி சொல்லிக் கொடுத்த காணொலி நினைவில் இருக்கிறது. அதைப் பார்த்த பொழுது ஒரு பழைய தமிழ்ப் பாடல் தான் நினைவிற்கு வந்தது - தமிழ் எழுத்துகளையும் முதலில் ராக வடிவில் அமைத்தப் பாடல் அதுவாகத் தான் இருக்கக் கூடும். 1978ஆம் ஆண்டு ஸ்ரீ காஞ்சி காமாட்சி திரைப்படத்தில் இடம்பெற்ற - "அனா கனா ஙனா .." பாடல் தான் அது. எத்தனை அருமையாய் தமிழ் எழுத்துகளுக்கு மெட்டு அமைத்திருக்கிறார்கள்.

 


தமிழ் எழுத்துகளில் ஆரம்பித்து தமிழ் இலக்கணம் வரை நமக்குக் கற்றுத் தருகின்றன திரைப்பாடங்கள். பாடல் தொடுக்கையில் நம் பாடலாசிரியர்கள் ஏதோ சில வார்த்தைகளைப் போட்டு கடந்து செல்லவில்லை. அத்தனை இலக்கணத் தொடை பொருந்த கவி படைத்திருக்கின்றனர்.

இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌனம் மட்டும்
ஏதோ செய்யுதடி..
என்னை ஏதோ செய்யுதடி...

(திரைப்படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
ஆண்டு: 1999)

இரவு × பகல், குளிர் × வெயில் என எதிர்சொற்கள் அடுத்தடுத்து வரும் வகையில் பாடலாசிரியர் பழனிபாரதி படைத்திருக்கும் இப்பாடல் முரண் தொடைக்கு அழகான எடுத்துக்காட்டு.


அகநக அகநக முகநகையே ஓ
முகநக முகநக முருநகையே ஓ
முருநக முருநக தருநகையே ஓ
தருணக தருணக வருணனையே

(திரைப்படம்: பொன்னியின் செல்வன் 2
ஆண்டு: 2023)

இந்தப் பாடலில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்கள், எதுகை - மோனை தொடை வரும் வகையில் மிகச் சிறப்பாக வரிகளை அமைத்திருக்கிறார். ஒரு பாடலில் அடிகளில் அல்லது சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. எ.கா. முகநக முகநக முருநகையே.
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை. எ.கா. அகநக அகநக முகநகையே

 

அடுத்து நான் பார்த்து ரசித்த பாடல்,

சங்கத்தில் பாடாத கவிதை
உன் அங்கத்தில் யார் தந்தது... 

சந்தத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தது... 

கை என்றே செங்காந்தள் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ.... 

கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ...

 

(திரைப்படம்: ஆட்டோராஜா
ஆண்டு: 1982)

இந்தப் பாடலில் கவிஞர் புலமைப் பித்தன் ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டு உவமை அணியை அழகாகப் பயன்படுத்தியுள்ளார். கை செங்காந்தள் மலர் போலவும், கால்கள் செவ்வாழை இலைகள் போலவும் இருப்பதாகப் பாடியுள்ளார். இங்கே "என்றே" என்ற சொல் தான் கவிஞர் ஒப்பீட்டுக்காகப் பயன்படுத்திய உவம உருபு.

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
ஒற்றை நாணயம்...
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்
ஒற்றை நாணயம்... 

துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்..
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்..
செவ்வந்திப் பூவின் நடுவில் பார்த்தேன்..
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்..
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன்..
ஒற்றை நாணயம்..

 

(திரைப்படம்: ஆனந்தம்
ஆண்டு: 2001)

முந்தையப் பாடலில் ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுக் கூறுவது, உவமை அணி. ஆனால், இங்கு அது போல் இருக்கிறது, இது போல் இருக்கிறது என்று கூறாமல், அது தான் இது என்னும் அளவிற்கு உறுதிப்படுத்திக் கூறுவது உருவக அணி. அதாவது, பல்லாங்குழியின் வட்டம், புல்லாங்குழலின் துளைகள், எனப் பல விடயங்களைப் பார்க்கும் போதும் அது ஒற்றை நாணயமாகவே அவருக்குத் தெரிகிறது. இது கவிஞர் யுகபாரதியைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்த முதல் பாடல்.

இப்படி நம் கவிஞர்கள், இலக்கண நடையோடு விட்டுவிடாமல், தமிழ் இலக்கிய வளத்தையும் சாமானிய மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடு பாடல்கள் எழுதினர். இலக்கிய கருத்துகளை தங்கள் வார்த்தைகளால் உணர்த்தியும், சில சமயம் இலக்கிய சொற்றொடர்களை அப்படியே பயன்படுத்தியும் அசத்தி இருக்கிறார்கள்.

புல்லினங்காள்.. ஒஓ..
புல்லினங்காள்...
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்.. 

புல்லினங்காள்.. ஒஓ..
புல்லினங்காள்...
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்..

(திரைப்படம்: 2.O
ஆண்டு: 2018)

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், முதல் இரண்டு வரிகளில் இரு இலக்கியங்களின் குறிப்புகள் உள்ளன. உங்களுக்கே தெரிந்திருக்கும் - "புல்லினங்காள்" மற்றும் "பேச்சரவம்" போன்ற சொற்கள் தற்போது வழக்கில் பயன்படுத்தப்படுவது இல்லை. இவை திருவாய்மொழி மற்றும் திருப்பாவை ஆகிய இரு பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சரி, திரைப்பாடல்களில் உள்ள இலக்கியக் குறிப்புப் பற்றிப் பார்த்து விட்டோம். சில பாடல்களில், முழு இலக்கியச் செய்யுளே இடம்பெற்றுள்ளது.

இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ
இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ
மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே
உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர்
சங்கணி வீதியிலே
மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொன் பந்து கொன்டாடினளே
மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே

(திரைப்படம்: காதலன்
ஆண்டு: 1994)

அடடா! தமிழ் இலக்கியம் திரை இசைப்பாடல்களிலா!? என்னே அருமையாக, மேலே உள்ள குற்றாலக் குறவஞ்சி பாடலை திரையிசைக்குள் புகுத்தியுள்ளார், கவிப்பேரரசு வைரமுத்து. இவர், இலக்கிய வரிகளை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே திரை இசைப் பாடல்களில் இடையில் எடுத்தாள்வதில் வல்லவர்.

இது மட்டுமில்லாமல், நாட்டுப்புறப் பாடல்களையும் திரை இசையில் மிக அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்.

பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம்…
தத்தினம் தை தை…
பறவைக்கெல்லாம் சொல்லம்மா சொல்லு…
பலவிதமாய் வந்து இறங்குதம்மா… 

இச்சை இல்லா ரெண்டு மணிபுறாவும்…
தத்தினம் தை தை…
மணிபுறாவும் சொல்லம்மா சொல்லு…
இன்பமுற கவர செய்யுதம்மா… 

மாடப்புறா கண்ட மயிலினங்கள்…
தத்தினம் தை தை…
மயிலினங்கள் சொல்லம்மா சொல்லு…
காட்டை விட்டு வந்து இறங்குதம்மா… 

பன்னாட்டு அந்த பறவை எல்லாம்…
தத்தினம் தை தை…
பறவை எல்லாம் சொல்லம்மா சொல்லு…
தெம்மாங்கு அங்கு பாடுதம்மா…

(திரைப்படம்: Bachelor
ஆண்டு: 2021)

நவீன் பிரபஞ்சம் அவர்கள் எழுதிப் பாடியுள்ள இந்த நாட்டுப்புறப் பாடல் கும்மி வகையைச் சார்ந்தது.

இப்படித் தமிழ்த் திரைப்பாடல்களில் பெரும் பாடங்களைச் சொல்லித்தரக் கூடிய  எண்ணற்ற அற்புதங்கள் பொதிந்து கிடக்கின்றன. பல நல்ல கருத்துகள், வாழ்க்கைப் பாடங்கள், மிக எளிமையான முறையிலும் தமிழின் அழகு சற்றும் குறையாமலும் பல கவிஞர்கள் பாடல்கள் எழுதியுள்ளனர். திரை உலகின் பல அங்கத்தினரை நாம் கொண்டாடிய அளவிற்கு பாடலாசிரியர்களைக் கொண்டாடி இருக்கிறோமா? அதனால் தான் ஓரிரு கவிஞர்கள் பெயரோடு நிறுத்திவிடாமல், இன்றைய சாமானிய மக்களிடத்தில் பெரிதும் அறியப்படாத நாம் ரசித்த கவிஞர்களையும் உங்களிடம் கொண்டு சேர்க்க எண்ணினேன். தமிழ்த் திரைப்பாடல்களைக் கேட்டுக், ரசித்து, கற்று மகிழுங்கள்.

நிறைவாக உங்களுக்கு ஒரு சவால்? கீழே கொடுக்கப்பட்டுள்ள திரைப்பாடல் எந்த திரைப்படம், எந்த இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

(விடை....)
.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

திரைப்படம்: தளபதி
ஆண்டு: 1991
இலக்கியம்: தேவாரம்

Comments

Popular posts from this blog

ஒரு நிகழ்வு பல கேள்விகள்

ஆட்டம் ஆரம்பம்

A Double Dhamakka